Pages

Friday, February 24, 2012

ஐந்தெழுத்து



      அம்மையாரின் பாடல்களில் சிவன் என்ற சொல் காணப்படாதது போல, அதை ஒட்டிப் பிறந்த நமசிவாய மந்திரமும் காணக் கிடைத்திலது. திருவிரட்டை மணிமாலையில் 10 மற்றும் 16 ஆவது பாடல்களில் வரும் ஐந்து என்ற சொல் நமசிவாய மந்திரத்தைக் குறிப்பதாகச் சிலர் பொருள் கொள்கின்றனர். கூர்ந்து நோக்கினால் உண்மையை உணரலாம்.

தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செற்பொற் கழல்.       (தி-10)

புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே
எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் திண்ணிய
கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த
அம்மானுக் காட்பட்ட அன்பு.       (தி-16)

      மேலான ஐந்தையும் சாதித்துப் பணிவுடன் மேலான தத்துவத்தை உணர்ந்தவர்கள் இறைவன் கழலைக் காண்பார்கள் என்பது முதல் பாடலின் பொருள். இறைவன் அருளால் நற்செயல்களும், தீநெறி சாராத ஐந்தும் தனக்கு வந்து சேர்ந்ததாக இரண்டாவது பாடலில் அம்மையார் கூறுகிறார்.

      இரண்டு இடங்களிலும் ஐந்து என்பது நமசிவாய மந்திரத்தைக் குறிப்பதாகப் பொருள் படவில்லை. புத்தர் போதித்த பஞ்ச சீலம் என்னும் அறநெறிகளோ அல்லது வேறு ஏதேனும் ஐந்து நன்னெறிகளின் தொகுப்போ தான் குறிக்கப் படுவதாகத் தெரிகிறது.

      திரு.வி.. இது ஐந்தெழுத்தைத் தான் குறிப்பது என்று உறுதிபடக் கூறவில்லை. முதல் பாடலில் வரும் ஐந்து என்பது ஐந்தெழுத்தையும் குறிக்கலாம், கொல்லாமை, களவாடாமை, கள்ளாமை, வெஃகாமை, பொய்யாமை ஆகிய அறநெறிகளையும் குறிக்கலாம், பஞ்ச சுத்தி என்னும் சடங்கையும் குறிக்கலாம் என்கிறார். இரண்டாவது பாடலில் வரும் ஐந்து ஐம்புலன்களைக் குறிக்கும் என்று மட்டும் குறிப்பிடுகிறார்.

                நமசிவாய என்ற மந்திரம் ருத்ரம் என்ற வேதப் பகுதியில் காணப்படுகிறது. இறைவனின் பல தோற்றங்களை விவரித்து, வணக்கம் தெரிவித்துக் கொண்டு வரும் 273 போற்றிகளில் 226வது மற்றும் 227வதாக நம சிவாய, சிவதராய என்று வருகிறது. மங்கலமானவருக்கு வணக்கம், மிக அதிகமான மங்கலமுடையாருக்கு வணக்கம் என்று இவை பொருள்படும்.

      எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்ற மையக் கருத்து உடையது ருத்ரம். அரசனுக்கு ஆலோசனை கூறும் அறிஞர் சபையின் தலைவர் முதல் தன் யஜமானின் வயலில் கதிர்களைத் திருடும் கடைக்கோடி மனிதன் ஈறாகப் பல வகை நிலை மனிதர் வடிவிலும் விளங்குபவராக வர்ணிக்கப்படுகிறார் ருத்திரன். இது செய்தொழில் வேறுபாட்டால் எவரும் தெய்வத் தன்மை இழப்பதில்லை என்பதை உணர்த்திச் சாமானிய மக்களும் சைவத்தில் பங்கு கொள்வதை ஊக்குவித்தது.
                வேதத்தில் நம (வணக்கம்) என்று தொடர்ந்து பல முறை வரும் பாடல் இது ஒன்றே. இது, ‘நாமாலை சூடியும் நம்மீசன் பொன்னடிக்கே பூமாலை கொண்டு புனைந்து அன்பால் ஏத்த வேண்டும் என்று அடியார்களுக்கு அம்மையார் உணர்த்தியபடி நாமாலைக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. (அ-87) வேதம் ஓத முடியாதவர்களும் சொல்லக் கூடியதாக நமசிவாய மந்திரம் அமைந்து, பாமர மக்களுக்கும் பிறவிப் பிணி அறுக்க எளிய வழி கிடைத்ததால் சைவம் மக்கள் இயக்கமாக வளர்ந்தது.
                வடக்கிலிருந்து வந்த அந்தணர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இரண்டாவது வேதப்பாடலான சமகம் இவ்வுலக வாழ்வுத் தேவைகளைக் கோருவது ஆகும். உணவு, புகழ், கேள்வித் திறமை, சத்துருக்களை வெல்லும் திறன், ஆயுள், நல்ல உடல், புத்திர பௌத்திரர்கள், வித்தை, நன்னம்பிக்கை, வசீகரண சக்தி, ஆடல் பாடல், செல்வம், இவ்வுலக இன்பம், சொர்க்கம், நல்ல வீடு, நோயின்மை, பயமின்மை, பலவகை தானியங்கள், மலைகள், மரங்கள் என்று இப்படியாகச் சுமார் 343 பொருட்கள் எனக்கு உரியனவாக ஆகட்டும் என்று வேண்டும் இது, அக்னியையும் விஷ்ணுவையும் குறித்ததாகத் துவங்கி, என்னைத் தேவர்கள் காப்பாற்றட்டும், பிதிரர்கள் அதை ஆமோதிக்கட்டும் என்று முடிவடைகிறது.

                சிவன் பெயரோ, ருத்ரன் பெயரோ வராவிடினும் இப்பாடல் சிவனுக்கு உரியதாக ஆக்கப்பட்டது. இது பிரசாரம் செய்யப்பட்டதால் மறுவுலகிலேயே பார்வையைப் பதிய வைத்துக் கொண்டு இவ்வுலக வாழ்வைப் புறக்கணிக்கும் சமண சாக்கியப் போக்கு மாற்றப் பட்டது. சமணத்தை எதிர்த்து வைணவம் போரிட்டதாகச் சான்றுகள் இல்லை.

சிவன் என்னும் நாமம் ஏற்பட்டது எப்படி?

                 கறைமிடற்று அண்ணல் சிவந்த மேனி உடையவர் என்ற கருத்து சங்க நூல்களிலும் அம்மையார் பாடல்களிலும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இறைவன் சிவன் என்ற பெயரால் சுட்டப்படவில்லை. எனவே சிவந்த நிறம் மட்டுமன்றி, வேறு ஒரு காரணமும் சேர்ந்து கொண்டதால் தான் அப்பெயர் வழங்கலாயிற்று என ஊகிக்கலாம்.

சிவகதி அருள்பவர் சிவன்

                முத்தி நிலையைக் குறிப்பிடச் சமணர்கள் சிவகதி என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளனர் என்று, காரைக்கால் அம்மையார் பாடல்களுக்குத் தான் எழுதிய உரையில் திரு.வி.கலியாணசுந்தரனார் கூறுகிறார். இந்த வடசொல் மங்கலகரமான, நல்ல நிலைமை என்று பொருள் தருவது. கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட சமணர்களைப் பொறுத்தவரை, சிவகதி என்பது இறைவன் என்ற ஒருவர் இல்லாமலேயே மகாவீரர் கொள்கைகளின் மீது நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் இவற்றால் விளைவது.

      அம்மையார் முதல் மூத்த திருப்பதிகத்தின் கடைக்காப்பில் காரைக்காற் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே என்கிறார். அவர் குறிப்பிடுவது முத்தி நிலையையே.

                சங்க காலத்தில் காய் கடவுள் என வழங்கப்பட்டு அஞ்சுதலுக்கு உரியவராகக் கருதப்பட்ட கண்ணுதற் கடவுள் அம்மையார் காலத்தில் ஒரு மாற்றம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். இப்பொழுதும் அவரது தோற்றம் அச்சம் தருவதாகத் தான் இருக்கிறது. ஆனால் அவர் அடியார்களிடம் அன்பு மிகுந்தவராகச் சித்தரிக்கப்படுகிறார். அவருடைய தோற்றத்துக்காக அவரை இகழாது போற்றினால் அவர் அடியார்களுக்கு எல்லாம் கொடுப்பார், நம்மை அவர் எந்த உயர்நிலையிலும் வைப்பார், எந்த உயர் உலகமும் தருவார் என்று அவருடைய எளிவந்த கருணையைப் போற்றுகிறார் அம்மையார். (அ-29, 78)

      இறைவன் காமனையும், காலனையும், முப்புரத்தையும் எரித்தவன் மட்டுமல்ல, விசயனுக்கு வில் அளித்த கருணையாளனும் கூட. ராவணனின் முரணை அழித்தானே அன்றி அவனையே அழிக்கவில்லை. அத்தகைய ஈசனை அன்பென்னும் போர்வையினுள் சுருட்டி நெஞ்சத்துக்குள் மறைத்து வைத்துவிட்டோம் என்று பெருமிதப்படுகிறார் அம்மையார். (அ-96)

                இறைவனை அஞ்சுதற்குரியவன் என்ற தொலைவிலிருந்து அன்புக்குரியவன் என்ற அண்மைக்குக் கொண்டுவந்த அவர் இன்னும் சற்று நெருங்கி அவனைக் கிண்டல் செய்யவும் துணிகிறார் என்பதை முன்னர்க் கண்டோம்.

                இவ்வாறு இறைவனின் நன்மை தரும் கோலத்தை முதன்மைப்படுத்தி அம்மையார் ஏற்படுத்திய பக்தி அலை இந்தத் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு அடைமொழியால் இறைவனை அழைக்கலாமே என்று மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்க வேண்டும்.

                சிவ என்ற சொல் தமிழில் சிவப்பு நிறத்தையும் ஸம்ஸ்கிருதத்தில் நலம் செய்பவர் என்ற பொருளையும் குறிப்பதாகும். இரு வகையிலும் அது இறைவனின் வெவ்வேறு பண்புகளைக் குறிப்பதாலும், இரு மொழியாளர்களுக்கும் உடன்பாடான சொல்லாக இருந்ததாலும் அது தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். வேதத்தில் ஆளப்பட்ட சொல்லாகவும் அது அமைந்தது, அதற்குப் பெருமையையும் ஏற்றுக் கொள்ளப்படும் தன்மையையும் சேர்த்திருக்கும்.

                 “தமிழ்ச் சொல், வடசொல் எனுமிவ்விரண்டும் உணர்த்தும் அவனை உணரலுமாமே என்று திருமூலர் கூறுவதன் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும். (திருமந்திரம் 66 ஆகமச்சிறப்பு 10)
     
                பெயரில்லாப் பெருமானைச் சுட்டும் எல்லாப் பெயர்களும் பண்புகளைக் குறிப்பிடும் அடைமொழிகளாகத் தான் பயன்படுத்தப் பட்டுள்ளன. அவ்வகையில் இது வரை பயன்படுத்தப் படாத சிவன் என்ற அடைமொழியும் சிவகதியையும் இவ்வுலக நல்வாழ்வையும் அருள வல்ல பெருமானின் நலம் செய்யும் தன்மையைக் குறிப்பிடுவதாகவே திருமூலர் பாடல்களிலும் தேவாரத்திலும் வந்துள்ளது. 

                                                         




சைவத் தொட்டில் – சோழநாடு



      தமிழ்நாட்டின் பிற பகுதிகள் போல் சோழநாட்டிலும் சமண சாக்கிய சமயங்கள் பெருகி வளர்ந்தன. புகழ் பெற்ற புத்த விகாரங்கள் இருந்த நாகப்பட்டினம், பூதமங்கலம் ஆகியனவும், காரைக்காலுக்கு மிக அருகாமையில் கொல்லார்புரம், புத்தர்குடி என வழங்கும் ஊர்ப் பெயர்களும், சம்பந்தர் திருநள்ளாறிலிருந்து திருத்தெளிச்சேரி வருமுன் அவரை வாதுக்கு அழைத்த சாக்கியர்கள் மீது இடி விழுமாறு செய்தார் என்ற பெரிய புராணக் குறிப்பும் சோழநாட்டு மக்களிடையே புறச்சமயங்கள் செல்வாக்குப் பெற்றிருந்ததைக் காட்டும்.

      ஆனால் சோழநாட்டு மன்னர் எவரும் சமணத்தையோ சாக்கியத்தையோ தழுவினதாகச் சான்றுகள் இல்லை. சோழநாட்டை ஆண்ட களப்பிர மன்னன் கூற்றுவன் கூடச் சிறந்த சைவனாகவே விளங்கினான். கூன் பாண்டியனும் மகேந்திர பல்லவனும் சமணத்தைத் தழுவியிருந்து சைவர்களுக்கு இன்னல் விளைத்த பெரிய புராணச் செய்தியையும், சேர நாட்டு இளவரசன் இளங்கோ சமணத் துறவியானது குறித்துச் சிலம்பு தரும் செய்தியையும் இதனோடு ஒப்பிடுக.    

      சைவ சமய எழுச்சிக்குச் சோழநாடு தொட்டிலாக விளங்கியது. இதற்குக் காரணமான அம்மையார், சம்பந்தர், திருமூலர் ஆகியோர் இங்கு தான் தோன்றினர். சைவத்தின் தலைநகரான தில்லையும் சோழநாட்டில் தான் உள்ளது. சைவத்தின் மிகப் பெரிய மாற்றங்கள் இக்காலத்தில் சோழ நாட்டில் ஏற்பட்டதற்குக் காரணம் என்ன?
     
      வேதநெறி ஒன்றே நாத்திகத்தை வேரறுத்துச் சைவத்தை நிலை நாட்டும் என்பதை, அம்மையார் சிவனை வேதநாயகனாகப் போற்றியதிலிருந்து சோழ மன்னர்கள் உணர்ந்திருக்க வேண்டும். எனவே வேதநெறி பரப்புவதற்காக வடக்கிலிருந்து அந்தணர்களை வரவழைத்தனர்.

      அம்மையார் காலத்துக்கும் அப்பர் காலத்துக்கும் இடையில் வடக்கிலிருந்து அந்தணர்கள் வந்தார்கள் என்பதை எப்படி அறிகிறோம்
     
      அம்மையார் காலம் வரை இல்லாத கணபதி வழிபாடும் திருநீறு பூசும் வழக்கமும் அப்பர் காலத்தில் காணப்படுகின்றன. அம்மையார் இறைவன் சுடலை நீறு பூசிய மேனியனாகக் காட்சி தருவதாகக் கூறுகிறாரே அன்றித் தான் நீறு பூசியிருப்பதாகவோ மற்ற இறை அன்பர்கள் பூசியிருப்பதாகவோ சொல்லவில்லை. திருநீறு தந்து சம்பந்தர் பாண்டியனின் நோய் தீர்த்ததையும், திலகவதியார் அப்பரின் சூலை நோயைப் போக்கியதையும் பார்க்கும் போது அவர்கள் காலத்தில் சிவனடியார்கள் திருநீறு பூசும் வழக்கம் ஏற்பட்டுவிட்டதை அறிகிறோம். இது பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்டது என்பதைக் கவனிக்க. மகாராஷ்டிர அந்தணர்கள்  ஹோமம் செய்த பின் அந்தச் சாம்பலை நீரால் குளிர்வித்துப் பூசும் வழக்கம் இருந்தது. இன்றும் அது அங்கும் இங்கும் தொடர்கிறது.

      அது போலக் கணபதி வழிபாடும் மராட்டியப் பகுதியில் மட்டும் தான் உண்டு. எனவே இவை அங்கிருந்து அக்காலத்தில் இங்கு வந்து குடியேறிய ஒரு கூட்டத்தினரால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

      அவர்கள் அந்தணர்கள் என்பதை எப்படி அறிகிறோம்?

      மராட்டியக் கொங்கணக் கடற்கரைப் பகுதியின் சித்பாவன் பிராமணர்களின் உடல் அமைப்பு தமிழ் நாட்டில் சில பிராமணரிடம் காணப்படுகிறது என்று வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரி கூறுவதிலிருந்து வந்தவர்கள் அந்தணர்கள் என்று தெரிகிறது. மேலும், தமிழ்நாட்டு ஸ்மார்த்தப் பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் நர்மதை நதிக்கு வணக்கம் செலுத்துகின்றனர். எனவே வந்தவர்கள் கொங்கணக் கடற்கரையில் நர்மதை நதி முகத்துவாரமாகிய புரோச் பகுதியைச் சேர்ந்தர்கள் என்பதும் தெரிகிறது.
     
      இந்தக் குடியேற்றத்துக்குக் காரணம் என்ன? பஞ்சம் காரணமாகப் பிழைக்க வந்தார்கள் எனச் சொல்ல முடியாது. அவ்வாறு இருந்தால் அந்தணர்கள் மட்டும் வந்திருக்க முடியாது. பிற சாதியினர் வந்ததற்கான சான்றுகள் இல்லை. அரச அழைப்பின் பேரில் தான் வந்திருக்க வேண்டும்.

      அழைத்தவர்கள் சோழ அரசர்கள் என்பதை எப்படி அறிகிறோம்? சோழ நாட்டில் தான் அந்தணர்களுக்கு மிகுதியான நிலங்கள் இறையிலியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அண்மைக் காலம் வரையிலும் இங்கு தான் அந்தணர்கள் மிகுதியாக வாழ்ந்தனர்.

      ஏன் நர்மதை நதிக்கரையிலிருந்து வரவழைத்தனர்? குஜராத்தில் லகுலீசர் என்பார் வேத ருத்திரனைப் பசுபதி என்ற பெயரில் வழிபடும் வழக்கத்துக்கு அடிகோலினார். பாசுபத சைவம் எனப்பட்ட இச்சமயம் அருகில் உள்ள நர்மதை நதிக்கரையில் பரவி இருந்திருக்க வேண்டும்மேலும் அக்காலத்தில் நர்மதை நதிக்கரை வேத நூற்கல்விக்கு ஒரு நிலைக்களனாக விளங்கி இருக்க வேண்டும் என்பது மேற்கல்வி கற்க விரும்பிய சங்கரர் அங்கு சென்றதிலிருந்து அறியப்படுகிறது. எனவே வேதநெறி சார்ந்த சைவத்தை வளர்க்க விரும்பிய சோழ அரசர்கள் இப்பகுதியிலிருந்து அந்தணர்களை வரவழைத்திருக்க வேண்டும்.

                லகுலீசரின் பிறந்த ஊராகிய காரவான் என்பதன் அடிப்படையில் இச்சமயம் காயாரோகண சைவம் எனப்பட்டது. தமிழ்நாட்டில் குடந்தை, நாகை, திருவொற்றியூர் ஆகிய மூன்று ஊர்களும் காயாரோகணத் தலங்கள் என அழைக்கப்படுவதிலிருந்து வந்தவர்கள் இம்மூன்று இடங்களில் முதன் முதலில் குடியேறி இருக்கவேண்டும் எனத் தெரிகிறது. இவற்றில் முதல் இரண்டு இடங்கள் சோழ நாட்டில் உள்ளவை. மூன்றாவதும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருக்க வேண்டும். இதற்குப் பிற்காலத்தில் தான் அப்பகுதிகள்  பல்லவ நாடாகப் பெயர் பெற்றன.

                தமிழ் நாட்டில், குறிப்பாகச் சோழ நாட்டில் அதற்கு முன் அந்தணர்கள் இல்லையா? இருந்தனர். ஆனால் அக்காலத் தமிழ் அந்தணரிடையே சிலர் மட்டுமே சைவத்தைச் சார்ந்து இருந்தனர் என்பது, தில்லை மூவாயிரவர், ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர், திருவீழிமிழலை ஐநூற்றுவர் என்று சைவ அந்தணர்களது எண்ணிக்கை மட்டும் சுட்டப்பட்டிருப்பதால் அறியலாம். பெரும்பான்மையான மற்றவர்கள் திருமால் வழிபாடே தமிழ் மண்ணின் பழமையான நெறி என்ற கொள்கையில் நிலைத்திருக்கக் கூடும். திந்நாகர் போன்ற சில பௌத்தர்கள் பிராமண குலத்தவர் என்று கூறப்படுவதிலிருந்து சிலர் சமண சாக்கியத்தைச் சார்ந்து இருந்ததும் பெறப்படுகிறது.

இந்த அந்தணர்கள் செய்தது என்ன?

                அம்மையாரால் துவக்கப்பட்ட சைவ மறுமலர்ச்சி இயக்கத்தை இந்த வடபுலத்து அந்தணர்கள் மேலும் கொண்டு செலுத்தினர். இவர்களால் தமிழகத்தில் வேதக் கருத்துகளும் பரவின, கணபதி வழிபாடு, திருநீறு அணிதல் ஆகிய வழக்கங்களும் பரவின.

வேதத்தைப் பரப்பினர்

                அம்மையார் காலத்தில் இல்லாத சிவன் என்ற பெயரும் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரமும் திருமூலர், அப்பர், சம்பந்தர் காலத்தில் மிகுதியாக வழக்கில் இருப்பதிலிருந்து இக்காலத்தில் தமிழ்நாட்டில் யஜுர் வேதத்தின் ருத்ரம் என்ற பகுதியும் அதனுடன் இணைந்த சமகம் என்பதும் முதன்மைப் படுத்தப்பட்டன என்பதை அறிகிறோம்.

பக்தி இயக்கத்துக்கு முன்னோடி அம்மையார்


      இறை அருளை அடைதல் எல்லோர்க்கும் எளிது என்று அம்மையார் கூறினார். துன்பக் கடலிலிருந்து விடுபட விரும்புவோரை அவர் அழைத்து எண்தோளன் தாள் பணியுமாறு அறிவுறுத்தினார். வேத வல்லுநர்களையும் அறிவுத் திறம் மிக்கோரையும் அவர் அழைக்கவில்லை. மாறாக, அவர் எளிய மக்களுக்கே உபதேசம் செய்கிறார். அதனால் எல்லாத் தரப்பு மக்களும் இறையன்பில் ஈடுபடலானார்கள். சிவநெறி மக்கள் இயக்கமாக மாறியது. பிற்காலத்தில் பல வேறு சாதி மக்களும் நாயன்மார் ஆவதற்கு அம்மையாரே வழி காட்டினார் எனலாம். 

வட இந்தியாவில் புத்த மத எழுச்சியால் நலிவடைந்திருந்த வைதிக சமயம் மீண்டும் தழைக்க உதவியவை புதிதாக எழுதப்பட்ட புராணங்களே. மஹாராஷ்டிரத்தில் இஸ்லாம் மேலோங்கிய நிலையில் அங்கு தோன்றிய சான்றோர்களின் அபங்கங்களே இந்து சமயத்தை நிலை நிறுத்தின. அது போலத் தமிழ் நாட்டில் சமணத்துக்கு எதிராகச் சைவத்தைத் தூக்கி நிறுத்திய பெருமை தேவார திருவாசகங்களுக்கு உண்டு எனினும் அவற்றிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவை அம்மையாரின் பாடல்களே.

அம்மையாரின் பாடல்களின் மொழியும் நடையும் சாதாரண மக்களின் அன்றாட அனுபவத்துக்கு ஒட்டி இருப்பதால் அது மக்களை விரைவாகக் கவர்ந்ததில் வியப்பு இல்லை.

பக்தி இலக்கியங்கள் இசை முதலிய கலைகளின் துணை பெறும்போது இவற்றின் தாக்கம் அதிகமாகிறது. அம்மையார் இசை நுணுக்கங்களைப் பற்றிக் கூறியிருப்பதால் அவர் இசை வல்லுநராக இருந்திருக்கக் கூடும். தனது படைப்புகளை அவர் இசையோடு பாடக் கேட்ட மக்கள் அவரைச் சூழ்ந்திருப்பர். அவரைப் பின்பற்றியே அப்பர் முதலானோர் மக்களை நல்வழிப்படுத்தத் தங்கள் பனுவல்களை இசையுடன் பாடும் வழக்கத்தை மேற்கொண்டனர்.  பதிகம் பாடும் முறை, கடைக்காப்பு பாடுதல் முதலியனவற்றையும் அம்மையாரிடமிருந்து பின்னர் வந்த சமயக் குரவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

                சிவன் மாலுக்கும் அயனுக்கும் அளக்க முடியாதவன் என்று சொன்னார் அம்மையார். சோதி வடிவில் என் சிந்தனையில் சுழல்கின்றான் எனவும் கூறினார். அப்பரும் சம்பந்தரும் இவை இரண்டையும் இணைத்து மாலயன் அறிய முடியாமல் சோதி வடிவமாய் நின்றான் என விரித்தனர்.

      அம்மையார் காட்டிய இறைவனின் சோதி வடிவத்தையும், கருணைப் பண்பையும் மிக அதிகமாகப் பெருமைப்படுத்தி மனமுருகினார் மணிவாசகர். அவரைத் தொடர்ந்து வள்ளலாரோ அருட் பெரும் சோதி தனிப் பெருங்கருணை என்பதை ஒரு மந்திரமாகவே உருவாக்கினார்.

                பிறவா நிலை விரும்பத்தக்கது தான். ஆனால் இறைவனைப் போற்றிப் பாடும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றால் எத்தனை பிறவிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று அம்மையார் கூறி இவ்வுலக வாழ்வை இடர் எனக் கருதும் சமண சாக்கிய சமயங்களின் கருத்தை மக்கள் மனதிலிருந்து அகற்றினார். அவரைப் பின்பற்றிய சம்பந்தர் சிவ பெருமானை வணங்குவோர் மண்ணிலும் நல்ல வண்ணம் வாழலாம், வானுலகில் நல்ல கதிக்கும் யாதும் ஓர் குறைவில்லை என்ற கருத்தைத் தன்  பாடல்கள் முழுவதும் பாடியுள்ளார். அப்பரும் உன் திருவுருவத்தைக் காணும் வாய்ப்புக் கிட்டுமானால் பிறவியை வெறுக்காமல் ஏற்றுக் கொள்வேன் என்று இறைவனிடம் குழைகிறார்.

                அவன் அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் என்ற அம்மையாரின் கருத்து பின்னர் வந்த அப்பர் பிரானின் வாக்கில் எதிரொலிப்பதைக் காண்கிறோம். அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதேஎன்கிறார் அவர். அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் பாடியதிலும் அம்மையாரின் தாக்கத்தைக் காண்கிறோம்.

                சுந்தரரின் முதல் பாடல் பித்தா என்று துவங்குகிறது. சிவனைப் பித்தன் என்று முதன் முதலாக அழைத்தவர் அம்மையாரே. (பதிகம் 2-4)

பலிக்குநீர்வரும் போது நுங்கையிற்
பாம்புவேண்டா பிரானிரே
என்ற சுந்தரரின் திருப்பைஞீலி தேவார வரிகள்

நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய
தீய அரவொழியச் செல்கண்டாய்- தூய
மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
விடவரவம் மேல்ஆட மிக்கு என்ற அ-57ஐ நினைவூட்டுகிறது

கையோர் பாம்பு அரையார்த்தோர் பாம்பு
கழுத்தோர் பாம்பவை    7.36.10
என்ற சுந்தரரின் வரிகள் அம்மையாரின்

பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக்- கோள்நாகம்
பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்
கென்முடிவ தாக இவர்                              
என்ற அ-28 பாடலை நினைவூட்டுகிறது.

                நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக என்ற கருத்து கல்வியின் மூலம் அவனை அடைய முடியாது என்று உறுதிப்படுத்துகிறது. நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந்தோர்கட்கே என்று அப்பர் கூறுவதன் கருத்து இதுவே. கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும் என்று இதையே மணிவாசகர் கூறுகிறார். அப்பர் தன் திருக்கழுக்குன்றப் பதிகத்தில் சுடருருவில் என்பறாக் கோலத் தான் என்று அம்மையாரின் (அ2 பாடலின்) சொற்றொடரை அப்படியே எடுத்தாள்கிறார்.  

                இறைவன் தன்னை ஆண்டு கொண்டு அருள் செய்ததை எண்ணிப் பெருமிதமாகச் சில  பாடல்களிலும், எனக்கு எப்பொழுது அருள் செய்வானோ என்று ஏக்கமாக வேறு சில பாடல்களிலும் மணிவாசகர் பாடுவது, அம்மையாரைப் போல், தான் நற்கதி அடைந்தது போதாது, ஏனைய மக்களும் இறை அருள் பெறவேண்டும் என்ற எண்ணத்தினால் தான்.

      யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற திருமூலரின் கருத்துக்கு வேர் அம்மையாரின் பாடல்களில் இருப்பதை அவரது நெஞ்சறிவுறுத்தும் பாடல்களில் கண்டோம்.

அம்மையாரின் தாக்கத்தை இஸ்லாத்திலும் காணலாம். குர் ஆனின் முதல் வசனம், லா இலாஹ் இல்லில்லாஹ் என்பது, ஈசன் அவன் அல்லாது இல்லை என்ற அம்மையார் வாக்கின் (தி-2) நேர் மொழிபெயர்ப்பே. சங்க காலத்திலிருந்தே அராபிய வாணிகர்கள் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் வாணிகம் செய்து வந்தனர். அவர்கள் அம்மையாரைப் பற்றி அறிந்திருக்கக் கூடும்.  நான் அந்தந்த இன மக்களிடமும் அவரவர் மொழியிலேயே பேசுகிறேன் என்று குர் ஆனில் கூறப்பட்டுள்ளதால் அம்மையாரை ஈசன் அவன் அல்லாது இல்லை என்று பேச வைத்த இறைவனே நபிகள் நாயகத்திடமும் அக் கருத்தை அரபி மொழியில் கூறியதாகக் கொள்ளலாம்.   









சோதி வழிபாட்டின் துவக்கம்



      அம்மையார் போற்றிய எம்மான் சுடலையில் நடனம் ஆடுபவன். சுடலையில் எப்பொழுதும் பிணம் சுடு தீ எரிந்து கொண்டிருக்கிறது. பெருமான் கையிலும் ஒரு பெருந் தீ எரிந்து கொண்டிருக்கிறது.  சூரியனும் சந்திரனும் அவனது இரு கண்களாக விளங்க, தீ அவனது மூன்றாவதான நெற்றிக்கண்ணாக உள்ளது. அவன் கண் விழித்துப் பார்த்தால் காமன் ஒண்பொடியாக ஆகிவிடுகிறான். அவன் கையிலிருந்து புறப்பட்ட ஒரு அம்பினால் முப்புரங்களும் வெந்து அழிகின்றன.

      அம்மையார் இறைவனின் உருவத்தை பலவாறு வர்ணிக்கிறார். அவன் தழற்கொண்ட சோதிச் செம்மேனி எம்மான். சிவந்த நீண்ட சடை, நெற்றியில் ஒரு கண். கறுத்த கண்டம். தலையிலும் மார்பிலும் பாம்புகள். இடையில் புலித் தோல், யானை உரி. காலில் சிலம்பும் கழலும். ஒரு பக்கத்தில் உமை. மறு பக்கத்தில் திருமால். இப்படி எல்லாம் சொல்லால் வர்ணித்தாலும் அம்மையாரால் இறைவனின் இத்தகைய உருவத்தை மனக் கண்ணால் காண முடியவில்லை.

      சுற்றிலும் எரிந்து கொண்டிருக்கும் தீயின் நடுவே, கையிலும் தீ ஏந்தி, தீப் போன்ற சிவந்த உடலுடன், அழல் வாய்ப் பேய், அழல் கண் பேய் இவற்றின் துணையோடு நடனமாடும் இறைவனை நினைத்தால் அந்தத் தீத் திரளின் சுவாலையில் மற்ற உருவ அடையாளங்கள் மறைந்து போய் சோதி வடிவம் ஒன்றே அவரது மனதில் தங்குகிறது. 

      அதனால் தான் அவர் அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன், இன்றும் திருவுருவம் காண்கிலேன் என்றும் சுடருருவில் எரியாடும் எம்மான் என்றும், காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றும் என்றும் ஈசன் திருவுருவம் மின்னுஞ் சுடருருவாய் மீண்டும் மீண்டும் என் சிந்தனைக்கே இன்னுஞ் சுழல்கின்றது என்றும் நொந்தாத செந்தீ அனையான் என்றும் வர்ணிக்கிறார். இப்படி தீ வடிவமாக நின்றாலும் அவன் உடல் எப்பொழுதும் குளிர்ந்து தான் உள்ளது. தீயைத் தீ சுடுமா?
     
      பஞ்ச பூதங்களும் அவனே என்றாலும் தீ மட்டும் அவனுடைய சிறப்பு வடிவமாகக் கருதப்படுவதற்கு வித்திட்டவர் அம்மையார். இறைவன் மாலுக்கும் அயனுக்கும் அளப்பரியன் என்று அம்மையார் சொன்னதையும் சேர்த்துப் பின்னர் வந்த மூவர் முதலிகள் காலத்தில் மாலயன் காணாப் பேரழலாக நின்றான் ஈசன் என்று ஒரு புராணக் கதை தோற்றுவிக்கப்பட்டது.

      இந்தத் தீ வடிவத்தைச் சம்பந்தர்  தன் ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாவது பாடலில் போற்றினார். வேதமும் தீ வழிபாட்டை முக்கியமாகக் கொண்டதால் வேத நெறியும் சைவ நெறியும் வேறுபாடற்றதாக இணைந்தன. வேத முறைப்படி வேள்வி செய்ய இயலாதவர்களும் தீ வடிவினனான சிவனை வணங்குவதன் மூலம் துயர் நீங்கி நலம் பெற முடியும் என்ற கருத்து வளர்ந்தது. சைவம் மக்கள் சமயமாக மலர்ந்தது.

ஆலங்காட்டிலிருந்து அம்பலம் வரை



அம்மையாருக்கும் அப்பருக்கும் இடைப்பட்ட இரு நூற்றாண்டுகளில் சைவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பல
. இந்த மாற்றங்களுக்கு அம்மையார் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருந்தார்.
                அம்மையாரின் மிகப் பெரிய கொடை என்று ஒன்றைச் சொல்வதானால் அது ஆடற்பெருமான் வழிபாடு என்று தான் சொல்ல வேண்டும். காரைக்கால் அம்மையார் தான் இறைவனின் நாட்டியக் கோலத்தை முதன் முதலாக மிக அதிகமாகப் போற்றுகிறார். அவரது அற்புதத் திருவந்தாதியில் பத்துப் பாடல்களிலும், இரட்டை மணிமாலையில் 2 பாடல்களிலும், மூத்த திருப்பதிகங்களில் எல்லாப் (22) பாடல்களிலும் அம்மையார் ஈசனின் நாட்டியக் கோலத்தைக் கூறுகிறார். ஆனால் அவர் ஆடற்பெருமானின் புகழ்பெற்ற தலமாகிய தில்லையை எங்கும் குறிப்பிடவில்லை.
       கலித்தொகை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் இறைவனின் நாட்டியக் கோலம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவற்றில் பாண்டரங்கம், கொடுகொட்டி, காபாலம் என்னும் மூவகை நாட்டிய வகைகளைச் சிவன் ஆடுவதாகக் காணப்படுகிறது. அம்மையார் இந்த நாட்டிய வகைகளைக் குறிப்பிடவில்லை.
       கருத்துருக்களைப் பொறுத்தவரை முதலில் பருமையாகத் தோன்றிப் பின்னரே அதில் உட்பிரிவுகள் ஏற்படுவது இயல்பு. எடுத்துக்காட்டாக, கடவுள் அவதரிக்கிறார் என்ற கருத்து முதலில் தோன்றிய பிறகு தான் அவதாரங்கள் பத்து என்ற பிரிவுகள் தோன்றி இருக்க வேண்டும். பல இசைக் கருவிகளின் பெயர்களையும் இசைக்கு அடிப்படையான சுரங்களையும் பட்டியலிடும் அம்மையார் இறைவனின் நாட்டிய வகைகளைக் கூறாதது கொண்டு இவ்வகைகள் பிற்கால வளர்ச்சியாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. எனவே இந்த நாட்டிய வகைகளைக் கூறும் சிலப்பதிகாரம், கலித்தொகை ஆகியவை அம்மையாருக்குப் பிற்பட்டவையோ என ஐயம் எழுகிறது.
திரு ஆருர்
       காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் ஆலங்காட்டில் இறைவனின் நடனமாடுவது கருத்தளவில் உருவாகி இருந்தது. தலையாலங்காடு என்னும் தலத்தில் அருவுருவமான லிங்கப் பெருமானுக்கு நர்த்தனபுரீசர் எனப் பெயரிடப்பட்டது. திருவாரூரில் அது மேலும் செம்மைப் படுத்தப்பட்டு நின்ற கோலத்தில் உள்ள உலோகச் சிலையில் காட்டப்பட்டது.  
       சோழ நாட்டில் ஏழு விடங்கத் தலங்கள் உள்ளன. (‘விடங்க என்ற சொல்லுக்கு உளியால் செதுக்கப்படாத என்று பொருள். கற்சிலைகளை உளியால் செதுக்கி உருவாக்குவது போல் அல்லாமல் அச்சில் வார்த்துச் செய்ததால் உலோகச் சிலைகள் அப்பெயர் பெற்றிருக்கக் கூடும். விடங்கத் தலம் என்ற பெயர் இங்கு தான் முதன் முதலாக உலோக சிற்பத் தொழில் வளர்ந்தது என்று கருத இடமளிக்கிறது.) திருவாரூர், திருநள்ளாறு, நாகை, திருக்குவளை, திருக்காறாயில், திருக்கோளிலி, வேதாரண்யம் ஆகிய இந்த இடங்களில் விடங்கப் பெருமான் இன்று தியாகராஜா என்று அழைக்கப் படுகிறார். இந்தத் தலங்களில் பிற்காலத்தில் நடராஜ விக்கிரகம் இணைக்கப்பட்டது. ஆனால் தியாகராஜா எனப்படும் விடங்கப் பெருமானே இந்தத் தலங்களில் முறையே அஜபா நடனம், கமல நடனம், தரங்க நடனம், குக்குட நடனம், உன்மத்த நடனம், பிருங்க நடனம், ஹம்ச நடனம், ஆகிய வெவ்வேறு வகை நடனங்கள் ஆடுவதாகக் கூறப்படுகிறது.
இந்த ஏழு தலங்களிலும் நின்ற நிலையிலான உலோக விக்கிரகத்தில் இறைவனின் நடனக் கோலம் கற்பிக்கப்பட்டு மட்டுமே இருந்தது. முதன் முதலாக ஆடும் கோலத்தைக்  கண்ணுக்குப் புலனாக்கிக் காட்டியது தில்லையே.
       இறைவனின் ஆடற் கோலத்தைச் சிற்பமாக வடிக்க இந்த ஏழு விடங்கத் தலங்களிலும் முயன்றிருக்க வேண்டும். நின்ற கோலத்தில் உள்ள சிலை வடிப்பது வரையில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தில்லைச் சிற்பிகள் இதில் முழு வெற்றி பெற்று உலோக சிற்பக் கலைத் துறையில் ஒரு பெரும் சாதனை படைத்துவிட்டனர்.
திருவாரூரின் தொடர்ச்சி தில்லை
       மற்ற ஆறு விடங்கத் தலங்களை விடவும் காரைக்கால் அம்மையாரின் ஆலங்காட்டை விடவும், தலையலங்காட்டை விடவும் திருவாரூருக்கு ஏற்றம் மிகக் கொடுக்கப்பட்டதற்குக் காரணம், அது அக்காலச் சோழ மன்னர்களின் தலைநகராக இருந்ததே. 
       ஆடற்கோலப் பெருமான் வழிபாட்டைப் பொறுத்தவரை திருவாரூர் பழமை வாய்ந்தது என்று கருதப்படுகிறது. எல்லாக் கோயில்களிலும் தேவாரம் பாடுவதற்கு முன் திருச்சிற்றம்பலம் என்று கூறித் தில்லையை வணங்கிய பின்னரே துவங்குவது வழக்கம், ஆனால் திருவாரூரில் மட்டும் அந்த வழக்கம் கடைப் பிடிக்கப் படுவதில்லை. எனவே இது தில்லையை விட மூத்த தலம் என்பது பெறப்படுகிறது.
       விடங்கத் தலங்களில் தியாகராஜா என்றும் விடங்கர் என்றும் அழைக்கப்படுபவர் உமையோடும் கந்தனோடும் கூடியவர் என்ற பொருளில் சோமாஸ்கந்தர் எனப்படுகிறார். அருகில் மற்றொரு அம்மன் சிலையும் சிவகாம சுந்தரி என்ற பெயரில் உள்ளது. தில்லை நடராஜாவின் அருகில் உள்ள அம்மனும் சிவகாமசுந்தரி என்றே அழைக்கப் படுகிறார்.
       திருவாரூரின் புற்றிடங்கொண்டாரும் தில்லையின் லிங்கப் பெருமானும் மூலட்டானேசுரர் என்றே அழைக்கப்படுகின்றனர். எனவே திருவாரூரின் சமய முயற்சிகளின் தொடர்ச்சியே தில்லை என்பது புலனாகிறது.
தில்லை   
                அம்மையாரின் பெம்மான் ஸம்ஹிதைக் கால ருத்திரனைப் போல் அச்சம் தரும் தோற்றம் உடையவன். கண்ணுக்கு அழகற்ற எட்டி, இலவம், ஈகை, காரை, சூரை ஆகிய முட்செடிகளுக்கு இடையிலும், காதிற்கு இனிமையற்ற நரி, ஆந்தை, கூகை, ஓமன் ஆகிய பிராணிகளின் ஓலத்துக்கு இடையிலும், நெடும்பல் குழிக்கட்பேய் சூழவும், மலையமான் மகள் மருண்டு நோக்கவும் பிணப் புகையினூடே நடனமாடுகிறான்.
தில்லை மூவாயிரவர் ஏத்திய அம்பலத்தாடியோ ஆனந்தமே வடிவானவன். அவன் தன் கொவ்வைச் செவ்வாயின் குமிண் சிரிப்பால் அடியார்களுக்கும் ஆனந்தம் அளிப்பவன். ஆனந்தமே பிரம்மம் என்று உபநிடதங்கள் கூறும். வேதம் பரிணாம வளர்ச்சி அடைந்ததற்கு இணையாக இறைவனின் தோற்றம் பற்றிய கருத்தும் மாறி வருவதைப் பார்க்கிறோம்.
       தில்லையில் ஏற்பட்ட நடராஜர் வழிபாடு எப்படி எல்லாக் கோவில்களுக்கும் பரவியது? எல்லாக் கோவில்களிலும் உள்ள மூர்த்திகள் அர்த ஜாமத்தில் தில்லையில் ஒடுங்குவதாகக் கூறப்படுவது ஏன்?
       சோழ அரசர்கள் ஆடல் வல்லான் வழிபாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்கள் காலத்தில் நெல் அளக்கும் மரக்காலுக்குக் கூட ஆடல் வல்லான் என்று பெயரிடப்பட்டது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் விநாயகருக்கும் முன்பாக நடராஜருக்குப் பூஜை செய்யப்படுகிறது. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செந்தளைக் கல்வெட்டு, சோழ நாட்டில் விளங்கிய கோயில்கட்கெல்லாம் முதன்மையாகப் புலியூர்ச் சிற்றம்பலம் விளங்கியதால் கோயில் தேவ காரியங்களைக் கவனிப்பவர்களே, நாட்டிலுள்ள ஏனைய சிவஸ்தலங்களின் வழிபாட்டு முறைகளையும் கண்காணித்து வந்துள்ளனர் என்று கூறுகிறது. எனவே சோழ அரசர் ஆணைப்படி எல்லாக் கோவில்களிலும் ஆடற்பெருமானின் சிலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
       இவ்வாறு அம்மையாரால் ஏற்படுத்தப்பட்ட ஆடற்பெருமான் வழிபாடு தில்லையில் மையம் கொண்டு தமிழ்நாடு முழுவதும் பரவியது.