Pages

Wednesday, April 20, 2011

ஓம்

இந்து மதத்தில் ஓங்காரத்துக்கு ஒரு விசேடமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வேதம் ஓதத் தொடங்கும் போதும் ஓதி முடித்த பின்னும் ஓம் என்பது உச்சரிக்கப்படுகிறது. ஐந்தெழுத்து உள்ளிட்ட எல்லா மந்திரங்களும் ஓங்காரத்துடன் தான் ஜபிக்கப் படுகின்றன. தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்யும் போது ஒவ்வொரு பெயருக்கு முன்னும் ஓங்காரம் சேர்க்கப் படுகிறது. இது எல்லா வேதங்களின் சாரம் என்று சாந்தோக்கிய உபநிஷத்தும், ஓங்காரமே பிரும்மம் (பரம் பொருள்) என்று தைத்திரீய, பிரச்ன உபநிடதங்களும் கூறுகின்றன.

பிரணவத்தின் பொருள் தெரியாத பிரமனைக் குட்டிச் சிறையில் அடைத்து சிவனார் மனம் குளிர அவர் செவியில் முருகன் ஓதினார் என்று புராணம் கூறுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஓங்காரத்தின் பொருள் என்ன?

ஓங்காரத்துக்குப் பொருளே சொல்ல முடியாது என்று சிலரும், இறைவன் தான் ஓங்காரத்தின் உட்பொருள் என்று சிலரும் கூறுவர். இன்னும் சிலர், உலகிலுள்ள அனைத்து ஒலிகளின் சங்கமமே ஓங்காரம் என்பர்.

ஓங்காரத்துக்கு இன்னொரு பெயர் பிரணவம் என்பது. ப்ரணவ என்ற வட சொல் ப்ர + நவ என்ற இரு சொற்களின் கூட்டு. ப்ர என்ற முன்னொட்டு முதன்மை அல்லது சிறப்பைக் குறிக்கும். நவ என்பதற்குப் புதுமை என்பது பொருள். எனவே ப்ரணவம் என்பது புதுமைக்குச் சிறப்பு என்று பொருள் தருகிறது.

புதுமை என்பது, அடிப்படையை மாற்றாமல் பிற விஷயங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகும். அடிப்படை ருதம். அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் சத்யம்.

பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் கணம் தோறும் மாறிக் கொண்டே, புதுமை அடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு பிரபஞ்சமே ஓங்கார ஸ்வரூபமாக உள்ளது. இந்த இடைவிடாத மாற்றங்களின் அடிப்படையான இறைவனும் ஓங்கார ஸ்வரூபனாகக் கருதப்படுகிறான். இறைவனை முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே என்று போற்றிய மாணிக்க வாசகர் அடுத்த அடியில் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்று கூறுவதை நோக்குக.

நம் வாழ்வில் புதுமை முதன்மை பெறுவது எப்படி? புத்தாடை, புதிதாகப் பிறந்த குழந்தை, அது நாள் தோறும் செய்யும் புதிய குறும்புகள், புத்தாண்டு எல்லாமே மகிழ்ச்சி தருவது அல்லவா? என்றும் புதுமையை நாடுவோர் என்றும் மகிழ்ச்சியாக இருப்பர்.

கம்பருக்கும் சேக்கிழாருக்கும் ஒவ்வொரு ஆண்டும் விழா எடுக்கிறோம். புதிய புதிய கருத்துகள் வெளிவந்தால் நாம் ரசித்து மகிழ்கிறோம். சென்ற ஆண்டு சொன்னதையே மீண்டும் சொன்னால் அரங்கம் காலியாகி விடும். பழைய கருத்தையே புதிய வகையில் சொன்னால் அதற்கு கவர்ச்சி, மதிப்பு, பயன் அதிகம்.

கலைத் துறையிலும் புதியன புகுத்துவோர் தான் வரவேற்கப் படுகின்றனர். சம்பிரதாயம் என்ற பெயரில், புதுமையை எதிர்ப்பவர்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவர்.

எல்லாத் துறைகளிலும் புதுமையைப் படைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்தினர் ஒரு கால கட்டத்தில் இனி புதிதாக உருவாக்க ஒன்றும் இல்லை என்று நினைத்து விட்டால் அப்பொழுதிலிருந்து அவர்களுக்கு வீழ்ச்சி தான்.

இடைக்கால இந்தியாவுக்கு ஏற்பட்டது இக்கதி தான். கலை, இலக்கியம், அரசியல், நாகரீகம் இவற்றில் மிக உயர்ந்த நிலை அடைந்த நம் முன்னோர் இனி உயர்வதற்கு இடமில்லை, இதைத் தொடர்ந்து காப்பாற்றினால் போதும் என்ற மன நிலை அடைந்து விட்டனர்.

புதியன முயன்று அடிபடுவதை விட முன்னோர் சென்ற பழைய வழியே பாதுகாப்பானது என்று மக்கள் நினைக்கத் தொடங்கிய அப் பொழுதிலிருந்து அன்னியர் படையெடுப்பு தொடங்கியது. துலுகமா என்ற புதிய போர் முறையைக் கொண்டு வந்த பாபர் வெற்றி பெற்றார். புதிய கடல் வழி கண்டு, வாணிகம் மூலம் மக்களை வசப்படுத்தும் புதிய தந்திரம் பயின்ற ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். பழைய பாதுகாப்பு முறைகளான கோட்டை, வாள், வில் அம்புகளையும் வெற்றி வேல், வீர வேல் போன்ற பழைய கோஷங்களையும் நம்பினோர் அடிமை ஆயினர்.
இது தான் வரலாறு கற்றுத் தரும் பாடம்.

சாதாரணமாகக் குழந்தைகள் தாம் புதுமையில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். புதிய கற்பனைகள், புதிய சிந்தனைகள், புதிய விளையாட்டுகள், புதிய நண்பர்கள் என்று நாள் தோறும் புதுமையை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் இது தான். குழந்தைகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.
நாற்பது வயதானால் நமக்கு நாய்க் குணம் வந்து விடுகிறது. நாய்க் குணம் என்பது புதுமையை வெறுக்கும் தன்மை தான்.

புதுமையைப் போற்று என்று குழந்தைகள் சொல்கின்றனர். மரத்துப் போன மூளை, மரத்துப் போன இதயம் கொண்ட முதியவர்களே, குழந்தைகளிடம் இதைக் கற்றுக் கொள்ளுங்கள். அர்த்தம் புரியாமல் நிமிடத்துக்கு நூறு முறை பிரணவத்தை உச்சரித்துக் கொண்டிராமல் அதை நடைமுறைப் படுத்துங்கள் என்பது தான் முருகனின் உபதேசம்.

பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவதைக் கேட்போம். “ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது. மஹா கணபதியே இந்த மந்திரத்தின் அதிஷ்டான தேவதை, சிருஷ்டி அடையாளம். எல்லையற்ற அறிவுக் கடலென்ற பொருளை தியானம் செய்யவேண்டும். அதுவே ஜபம். பொருளை பாவனை செய்யாமல் வெறுமே சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல் அதிகப் பயன் தர மாட்டாது என்பது பதஞ்சலி மஹரிஷியின் வாதம்.”

வேத அடிப்படையிலிருந்து விலகாமல், காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வந்ததால் தான் இந்து சமயம் எத்தனையோ சோதனைகள் வந்தும், அவற்றைக் கடந்து வந்து இன்று உலகளாவப் பரவத் தொடங்கியுள்ளது. இக்கருத்தைச் சுருக்கமாகச் சொல்வது தான் ஓம் எனும் மந்திரம்.

No comments:

Post a Comment