திருக்கடையூர் அமிர்த கடேசுரர் சன்னிதியில் நின்று கொண்டிருக்கிறேன்.மாலையும் கழுத்துமாகப் பல முதிய தம்பதிகள் (சில தனிக்கட்டைகளும் கூடத்தான்) நின்று கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரைச் சுற்றியும் ஒரு சிறு கூட்டம். அறுபது வயது முடிந்தவர்கள் தன் சதாபிஷேகமும் இதே போல் சிறப்பாக நடக்கவேண்டுமென வேண்டிக் கொள்கின்றனர். எண்பது முடிந்தவர்களோ தான் நூறாண்டு வாழ வேண்டுமென வேண்டுகின்றனர். சுற்றியுள்ளவர்களும் தாங்களும் இதே போல் 60, 80 எல்லாம் கொண்டாடப் போகும் காலத்தை மனக்கண்ணால் கண்டு மகிழ்கின்றனர்.
ஆனால் நான் மட்டும் இறைவா என்னை விரைவில் மரணமடையச் செய் என்று வேண்டுகிறேன். நான் ஏதோ துன்பத்தில் உழன்று விரக்தியின் காரணமாக மரணத்தை நாடுவதாக எண்ண வேண்டாம். எனக்கு வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை. அவ்வப்போது வரும் சிறு துன்பங்களையும் எப்படிப் பாசிடிவ் ஆக எடுத்துக் கொள்வது என்பதையும் நான் இளம் வயதிலேயே கற்றுக் கொண்டு விட்டேன். ஆனாலும் நான் ஏன் சாக விரும்புகிறேன் ?
எந்த வேலை செய்தாலும் ஒரு குறிக்கோளுடன் தான் செய்கிறோம். ஆனால் மிக மிக முக்கியமான தான வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்ற கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நான் இந்தக் கேள்விக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொருவர் ஒவ்வொரு பதில் சொன்னார்கள். எதுவும் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. இது பற்றிப் பேசுவதே தவறு என்று தான் பலரும் கருதுகிறார்களே அன்றி எவரும் இது முற்றித் தீவிரமாகச் சிந்திப்பதாகத் தெரியவில்லை. என் மனைவி மக்களைக் காப்பாற்றுவதற்காக நான் உயிர் வாழ வேண்டும் என்று தான் பலரும் புத்திமதி சொன்னார்கள். நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று நினைத்து என்னைப் பாச வலையில் கட்டிப் போட அவர்கள் செய்யும் முயற்சி இது. பாவம் , அவர்கள் அறியாதது, என் மனதில் தற்கொலை எண்ணமே தோன்றியதில்லை. என் கேள்வியே, எதற்காக வாழ வேண்டும் என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேனே, அப்படியும் தற்கொலை எண்ணம் ஏன் தோன்றவில்லை என்பது தான்.
பிரச்னை என்னைப் பற்றியது மட்டுமல்ல. என்னைச் சுற்றி ஏராளமான பேர் எவ்வளவோ துன்பங்களுக்கிடையிலும் சாகவேண்டும் என்று நினைக்காமல் வாழ வேண்டும் என்று போராடுகிறார்களே, ஏன் ?
பிள்ளைகள் மற்ற உறவினர்கள் இருந்தும் அவர்களால் சுமையாகக் கருதப்பட்டு முதியோர் இல்லங்களில் மன வேதனைகளை ச் சகித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே அவர்கள் சார்பில் கேட்கிறேன்.
தீர்க்க முடியாத நோய்களால் பீடிக்கப் பட்டு மருத்துவ விஞ்ஞானத்தின் புண்ணியத்தால் செயற்கையாக உயிர் வாழ வைக்கப் பட்டு மருத்துவர்களுக்குப் புதிய மருத்துவ முறைகளைச் சோதித்துப் பார்க்கும் களமாகவும் வருவாய் தரும் கருவூலமாகவும் உறவினர்க்குச் சுமையாகவும் விளங்கும் நோயாளிகள் சார்பாகக் கேட்கிறேன்.
பிறவியிலேயோ , நோய் அல்லது விபத்தின் காரணமாகவோ உடல் உறுப்புக் குறை ஏற்பட்டு வேலை செய்யச் சக்தி இழந்து பிச்சை எடுத்து உயிர் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறவர்கள் சார்பாகக் கேட்கிறேன்.
நாங்களெல்லாம் தற்கொலைக்குத் துணியாத காரணம் என்ன ? வாழ்க்கையில் எங்களைக் கட்டிப் போட்டிருப்பது எது ? அந்த ஒன்றைத் தான் நானும் அரை நூற்றாண்டாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் என்று பலரும் கூறுகிறார்களே, நான் கோழை அல்ல என்று பிறரிடம் நிரூபிக்க ஆசையா?
தற்கொலை செய்துகொண்டால் பேயாகப் பிறப்பார்கள் என்று சிறு வயதில் சொல்லப் பட்டதை இன்று அறிவு ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பழைய போதனையின் வாசனை போகாததாலா ?
எவருமே இது பற்றிச் சிந்திக்காத போது நான் மட்டும் சிந்தித்துப் பைத்தியக்காரப் பட்டம் கட்டிக் கொள்ள வேண்டி இருக்குமே என்ற பயமா?
துன்பத்தில் உழலும்போது மட்டுமல்ல, இன்பத்தில் ஆழ்ந்திருக்கும் போதும் இந்த எண்ணம் என்னை விடாது பற்றிக் கொண்டிருந்தும் என்னைச் செயல்பட விடாது தடுப்பது எது?
இறைவா, என் தேகத்தைச் சாய்த்துவிடு, இன்றேல் இது போன்ற சிந்தனைகளை என் உள்ளத்தில் தோன்றாது மாய்த்து விடு.