இரவு பத்து மணி இருக்கும் அப்பொழுது தான் உறங்க
ஆரம்பித்திருந்தேன். கீய்ங், கீய்ங் என்று நாய்க் குட்டிகள் கத்தும் சத்தம்
கேட்டுக் கண் விழித்தேன். மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தேன்.
என் வீட்டிற்கு அடுத்தாற்போல் ஒரு மனை பல வருடங்களாகக் காலியாக
உள்ளது. அதற்கு நான்கு புறமும் காம்பவுண்டுச் சுவர் உண்டு. அதில் இரண்டு சுவர்கள்
சந்திக்கும் மூலையிலிருந்து தான் சத்தம் வந்தது. நாய் ஒன்று குட்டி
போட்டிருக்கிறது போலும். லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. என் வீட்டுக் காம்பவுண்டு
ஓரமாக நின்று பார்த்ததில் நான்கு குட்டிகள் கொழு மொழுவென்று பஞ்சுப் பந்துகள் போல
அழகாக இருந்தன. பிறந்து பத்து நாள் இருக்கும்.
நான் தற்போது சென்னை வாசி. இவ்வூருக்கு வந்து இரண்டு
நாட்களாகிறது. இரண்டு நாட்களாகச் சத்தம் வரவில்லை. இப்பொழுது ஏன் கத்துகின்றன? ஒருக்கால் மழையில்
நனைவதனாலோ?
சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. எனக்கு மனது தவித்தது. “இந்தப் பிஞ்சு
உயிர்களின் துன்பத்தைப் போக்க நம்மால் ஏதேனும் செய்ய முடியுமா?” என்று சிந்தித்துப்
பார்த்தேன். ஒன்றும் புலப்படவில்லை. கீழ் வீட்டில் குடியிருப்பவரை எழுப்பி என்
சோகத்தைப் பகிர்ந்து கொண்டேன். அவர் ஒரு பாலிதீன் விரிப்பை எடுத்து வந்து இரு
சுவர்களையும் மூடும் வகையில் பந்தல் போல் விரித்து விட்டு அது காற்றில் பறக்காமல்
இருக்க அதன் மேல் நான்கு கற்களையும் வைத்துவிட்டுத் தன் கடமை முடிந்ததாக
நினைத்துத் தூங்கப் போய்விட்டார்.
அப்படியும் குட்டிகள் கத்திக் கொண்டு தான் இருந்தன. எனக்குத்
தூக்கம் வரவில்லை. வாசல் சன் ஷேடின் கீழ் நின்று அந்தத் திசையையே பார்த்துக்
கொண்டிருந்தேன். மழை சோவென்று பலத்த சத்தத்துடன் பெய்யத் தொடங்கியது. அதையும் மீறி
குட்டிகளின் அவலக் குரல் கேட்டது. பாவம், குளிர் தாங்கவில்லை போலும். இவற்றை
எடுத்து வந்து மேலே என் வீட்டு வரவேற்பு அறையில் ஒரு சாக்கை விரித்துப் படுக்க
வைக்கலாமா என்று எண்ணினேன்.
அடுத்த வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் ஏறிக் குதித்து அவற்றை
எடுத்து வருவது ஒன்றும் பெரிய வேலை இல்லை தான். ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் பல
உண்டு. முதலில், என்னிடம் டார்ச் லைட் இல்லை. இரவில் யாரை எழுப்பி டார்ச் லைட்
இரவல் கேட்பது? செல் போன் வெளிச்சத்தை வைத்துக் கொண்டு ஓரளவு சமாளிக்கலாம். ஆனால் அடுத்த
மனையில் பாம்புகள் நடமாட்டம் அதிகம். என் வீட்டிற்கும் அவை வருவதுண்டு. நாங்கள்
அடிப்பதில்லை. நான் இந்த வீட்டைக் கட்டி இதில் முப்பது வருடம் வாழ்ந்திருக்கிறேன்.
யாரையும் பாம்பு கடித்தது இல்லை. கையைத் தட்டினால் ஓடி மறைந்து விடும். எங்களுக்கும்
பாம்புகளுக்கும் அப்படி ஒரு எழுதப்படாத உடன்படிக்கை. ஆனால் இந்த அரைகுறை
வெளிச்சத்தில் தெரியாமல் நான் பாம்பின் மேல் காலை வைத்துவிட்டால் அது அந்த
ஒப்பந்தத்தை மதித்து நடக்குமா என்பது சந்தேகமே.
மேலும், குட்டிகளை எடுக்க முயன்றால் தாய் நாய் என்னை ஏதோ
விரோதியாகக் கருதி கடித்து விடவும் கூடும். ஒரு புறாவுக்காகத் தன் உயிரைக் கொடுக்க
முன்வந்த சிபி போல நாய்க்குட்டிகளுக்காக என் உயிரைக் கொடுத்து வரலாற்றில் இடம் பெற
விருப்பமில்லை. ஆனாலும் இந்தச் சின்னஞ் சிறு பிராணிகளின் துன்பத்தைப் போக்க வழி
தெரியாமல் இருக்கும் என் பலவீனத்தை நினைக்கும் போது வெட்கமாக இருந்தது.
குட்டிகள் மழைச் சத்தத்தோடு போட்டி போட்டுக் கத்திக்
கொண்டிருந்தன. எனக்குத் தூக்கம் வரும் என்ற நம்பிக்கை இல்லை. அங்கேயே திண்ணையில்
உட்கார்ந்து கொண்டேன். இதற்கிடையில் பாலிதீன் விரிப்பில் தண்ணீர் நிரம்பி குளம்
போல் நடுவில் குழிந்து விட்டது. அதன் எடை தாங்காமல் மேலே வைத்திருந்த கற்கள்
விழுந்து விடவே அத்தனை தண்ணீரும் குட்டிகள் மேல் தடதடவென்று கொட்டி மூழ்கடித்தது.
அதனால் கத்தல் இன்னும் அதிகமாயிற்று.
ஆண்டவனே, எனக்கு இவ்வளவு பெரிய உடலையும் அறிவையும் இத்தனை
வசதிகளையும் கொடுத்திருக்கிறாய். இந்த
அற்ப ஜீவன்களுக்கு உதவ முடியாமல் இவற்றால் என்ன பயன்? அக்கம் பக்கத்தில்
இத்தனை பேர் இந்தச் சத்தத்தை லட்சியம் செய்யாமல் தூங்கவில்லையா? எனக்கு மட்டும் ஏன்
இப்படி மனம் சங்கடப்படுகிறது? முல்லைக்குத் தன் தேரையே பந்தலாக்கிய பாரியைப்
பற்றியும், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரைப் பற்றியும் படித்ததை
மற்றவர்களைப் போல மறந்துவிடாமல் நினைவில் வைத்திருப்பதாலா? செயல்படுத்தப்பட
முடியாத நெஞ்சின் ஈரம் இருந்தும் ஒன்று தான், இல்லாததும் ஒன்று தான். திண்ணையில்
சாய்ந்து யோசனை செய்து கொண்டே எப்பொழுது தூங்கினேன் என்று தெரியாமல் தூங்கி
விட்டேன்.
வழக்கமாகத் தேங்காய் பறிப்பவர் காலையில் வந்தார்.
அவருடன் எனக்கு முப்பது வருடப் பழக்கம். “வாங்க ஐயா, எப்போ வந்தீங்க? நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டுக்
கொண்டே படியேறினார். அவருக்குப் பதில் முகமன் கூறிவிட்டு அவருடன் கொல்லைப் புறத்துக்குச்
சென்றேன். “பட்டண வாசியாப் போயிட்டீங்க, இருந்தாலும் ஊரை மறக்காம வந்திட்டுப் போயிட்டு
இருக்கீங்களே. அதாங்க நல்லது. ஆனா, என்ன சொல்லுங்க, நம்ம ஊருக்கு ஈடு இந்த ஒலகம்
பூராத் தேடினாலும் கெடைக்காதுங்க, என்ன சொல்றீங்க?” என்றார்.
ஆமாம் என்று ஒப்புக் கொண்டேன். மரத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்
கொண்டு காலில் நார் வளையத்தை மாட்டிக் கொண்டு விறுவென்று மரம் ஏற ஆரம்பித்தார்.
“அந்த மூலையிலே நாய்
குட்டி போட்டிருக்கு. அந்தப் பக்கம் காய் விழாமல் பாத்துங்கண்ணே.”
“சரிங்க.”
அவருக்கு வயது எண்பது இருக்கும். அவரை மரம் ஏறச் செய்வதில் எனக்கு
விருப்பம் இல்லை. எனக்கும் அவரை விட்டால் வேறு ஆள் இல்லை. அவருக்கும் பிழைக்க வேறு
வழி இல்லை. இரண்டு பிள்ளைகள் துபாயில் இருக்கிறார்கள். பணம் காசு அனுப்புவதில்லை.
ஒரு முறை சொல்லிப் பார்த்தேன். “நீங்கள் மரம் ஏறுவதை விட்டு விட்டு ஏதேனும்
சின்னதாக வியாபாரம் செய்யலாமே, நான் வேண்டுமானால் பணம் தருகிறேன்” என்றேன். அவர்
ஒப்புக் கொள்ளவில்லை. “நீங்க கவலைப் படாதீங்க ஐயா. என்னை முருகன் காப்பாத்துவான்” என்று உறுதியாகக்
கூறுவார். அவர் மரம் ஏறி இறங்கி வரும் வரையில் என் வாய், “காக்க காக்க, கனக
வேல் காக்க” என்று புலம்பிக் கொண்டிருக்கும்.
தேங்காய்களைப் பறித்துப் போட்டு, இறங்கி வந்து, எல்லாவற்றையும்
குவித்து விட்டு என்னிடம் காசு பெற்றுக் கொள்ளும் நேரத்தில் என்னைப் பார்த்தவர், “ஏன் ஐயா, மொகம் ஒரு
மாதிரி இருக்கு? ஒடம்பு நல்லா இல்லையா?” என்றார்.
நான் முதல் நாள் இரவுக் கதையைச் சொன்னேன். அவர் அதைக் கேட்டு
விட்டு, “இதுக்குப் போயா இவ்வளவு அலட்டிக்கிட்டீங்க? நாய்க் குட்டிங்க அப்படித்
தான் கத்தும். கத்தக் கத்தத் தான் அதுக்கு பலம். மனிசக் கொழந்தைகளுக்கும் அப்படித்
தான்”. என்றார்.
“ஆனா ரெண்டு நாளா இப்படிக் கத்தல்லியே. மழையிலே நனைஞ்சதனாலே
தானே கத்துது. இப்படி ரொம்ப நேரம் நனைஞ்சா செத்துடாதா?”
“பூனைக்கும் ஆட்டுக்கும் தாங்க மழை ஆவாது. மத்த எந்தப்
பிராணிக்கும் ஒண்ணும் செய்யாதுங்க. முருகன் ரெயின் கோட்டு போட்டுத் தான் பூமிக்கு
அனுப்பறான். மனுசனுக்கும் அப்படித் தாங்க. ஒங்களைப் போல ஆப்பீசிலே ஒக்காந்து வேலை
செய்யறவங்க தான் மழைலே நனைஞ்சா சளி புடிக்கும்பீங்க. எங்களைப் போல வய வெளிலே கெடக்கிறவங்க
கொடையைப் புடிச்சிக்கிட்டா வேலை செய்ய முடியும்? நனைவோம், காய்வோம்.
ஒண்ணும் ஆகாதுங்க.”
உண்மை தான் அவரைப் பார்த்தாலே தெரிகிறது. ‘அரிவாளைக் கொண்டு
பிளந்தாலும் கட்டு மாறா உடல் உறுதி’ என்று பாரதியார்
சொன்னபடியான வைரம் பாய்ந்த உடல் அது.
“மழை அதுக்குப் பாதிக்காதுன்னா பின்னே ஏன் அது கத்துது?”
“நாப்பது வயசிலே நாய்க் கொணம்னு சொல்றாங்கள்ல, அது என்ன
கொணம்னு தெரியுமா ஐயா ஒங்களுக்கு?”
“நன்றியோட இருக்கறது.”
“அது ஒசந்த கொணமில்லே. ஆனா நாய்க் கொணம்னு கேவலமால்ல
சொல்றாங்க.”
அது என்ன கேவலமான நாய்க்குணம்? யோசித்துப் பார்த்தேன்.
புலப்படவில்லை.
“சொல்லுங்க.”
“நம்ம வீட்டுக்கு யாராவது புதுசா வந்தா நாய் குலைக்குது.
அவங்களே அடிக்கடி வந்தா அது குலைக்கிறதை நிறுத்திக்குது இல்லையா?”
“ஆமாம்.”
“நாய்க்குப் புதுசா எதுவானாலும் புடிக்காது. அது தான் அதோட
பொறவிக் கொணம். குட்டிங்க பொறந்து நாலஞ்சு நாளைக்கு கண் மூடியிருக்கும். கண்ணெத்
தொறந்து பாத்தா ஒரே வெளிச்சமா இருக்கா, அந்த வெளிச்சம் அதுக்குப் புடிக்காது.
கத்தும். அப்புறம் அது பழகிப் போயிடும். ராத்திரிலே இருட்டைக் கண்டா புதுசா
இருக்கா, கத்தும். அப்புறம் அதுவும் பழகிப் போயிடும். இப்போ மழை பெய்யிறது
இதுகளுக்குப் புதுசு. புடிக்கல்லே. கத்துது. அது பழகற வரைக்கும் கத்திக் கிட்டு
தான் இருக்கும்.”
அப்படியா? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஈவு இரக்கம்
இல்லாமல் தூங்குகிறார்கள், நான் மட்டும் தான் ஏதோ புத்தர், ஏசு, காந்தியின்
அவதாரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேனே. அவர்கள் எல்லோரும் விஷயம்
தெரிந்தவர்கள்.
“முழுக்கக் கேளுங்க ஐயா. மனுசப் பயலுக்கு நாப்பது
வயசாச்சின்னா இந்த நாய்க் கொணம் வந்திடும். புதுசா எது வந்தாலும் புடிக்காது. புது
ஊரிலே குடியேற மாட்டான். அப்படிப் போனாலும் எங்க ஊரு மாதிரி ஆகுமான்னு
சொல்லிக்கிட்டு இருப்பான். புதுசா தொழில் ஆரம்பிக்க மாட்டான். கஷ்டமோ நஷ்டமோ பழைய
வேலயையே தான் செய்வான்.
“சின்னப் புள்ளைங்களைப் பாருங்க. எப்போப் பாத்தாலும் புதுப்
புது விஷயங்களைத் தேடிப் போயிட்டு இருப்பாங்க. பொறந்த கொழந்தை தெனம் ஒரு புது
வெளையாட்டு வெளையாடுது. புதுசு புதுசா வார்த்தை கத்துக்குது. புதுப் புது
சினேகிதம் ஏற்படுத்திக்கிட்டு பழகுது. அது தான் எப்பவும் சந்தோஷமா இருக்குது.”
உண்மை தான். புது மனிதர்கள், புது விஷயங்கள் என்றால் நாம் மிகுந்த
எச்சரிக்கையோடு தானே அணுகுகிறோம்.
“எங்க முருகனைத் தகப்பன் சாமிம்பாங்க. அப்பனுக்கே உபதேசம்
பண்ணினவனுங்க. அதுக்கு என்ன அர்த்தம்? புதுப் புது விஷயங்களைப்
பாத்து பயப்படாம அதை அதை அப்படி அப்படியே ஏத்துக்கணும்னு அதை மறந்து போன
பெரியவங்களுக்குச் சின்னப் புள்ளைங்க தான் சொல்லித் தர முடியும்.”
முற்றிலும் உண்மை. பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவது
எனக்கு நினைவுக்கு வந்தது. “ஓம்
என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள்
சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது.”
முருகன் சிவனுக்கு ஓங்காரத்தின் உட்பொருளை உபதேசித்த கதையில்
இவ்வளவு பெரிய சூட்சுமம் இருக்கிறதா? எவ்வளவு எளிதாகச்
சொல்லிவிட்டார் படிப்பறிவில்லாத இந்த மரமேறி!