இரெட்டியப்பட்டி
சுவாமிகள்
உடற் பிணி நீக்கிய
உத்தமர்:-
இரெட்டியப்பட்டி
என்பது அருப்புக்கோட்டைக்கும் தூத்துக்குடிக்கும் இடையேயுள்ள ஒரு சிற்றூர். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கு
சித்தியடைந்த ஒரு மகான், ஊரின்
பெயரால் இரெட்டியப்பட்டி சுவாமிகள் என்று அழைக்கப்படுகிறார். இவரது சீடர்கள் தமிழ்நாடு முழுவதும்
பரவியுள்ளனர். சென்னை ரத்னா ஃபேன்
ஹவுஸ் உரிமையாளர்கள் தியாகராய நகரில் அவரது விழாவை ஆண்டு தோறும் கொண்டாடி
வருகிறார்கள். இரெட்டியப்பட்டியிலும் ஆண்டு தோறும் குருபூஜை நடைபெற்று வருகிறது.
சுவாமிகளின் போதனைகள்
அவரது சீடர்களால் சட்டம் என்று அழைக்கப்படுகின்றன. அரசாங்கம் இயற்றும் சட்டம் போல,
சுவாமிகளின் போதனைகளும் பயபக்தியுடன் மதிக்கப்பட்டு பின்பற்றப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்குக் காணலாம்.
1 விடியல் நீராடல்
சுவாமிகளின்
சட்டத்தில் முக்கியமானது விடியல் நீராடல். சுவாமிகளின்
சீடர்கள் நாள் தோறும் விடியற்காலை 4 மணிக்கு
எழுந்து விடவேண்டும். ஐந்து
மணிக்குள் குளிர்ந்த நீரில் தலை முழுகிக் குளிக்க வேண்டும். அது ஆற்று நீர், குளத்து நீர், கிணற்று நீர் அல்லது குழாய் நீர் - எது
வேண்டுமானாலும் இருக்கலாம். கோடை
ஆனாலும் குளிர்காலம் ஆனாலும் குளிர்ந்த நீர் தான். இதற்கு எந்த விதிவிலக்கும் கிடையாது. நோய்வாய்ப்பட்டிருந்தாலும் குளிர்ந்த நீரில்
குளித்தாக வேண்டும். சட்டத்தைப்
பின்பற்றுபவர் பிரசவித்தால், பிரசவித்த
நாள் அன்றும் தொடர்ந்தும், தாய்க்கும் குழந்தைக்கும் குளிர்ந்த நீரில்
தலை முழுக்காட்டுவர். கடும்
காய்ச்சல் போன்ற நிலைகளில் மேலும் ஒரு முறை மாலையிலும் குளிக்க வேண்டும். இதனால்
நோய் மிகுதிப்படாதா, பிரசவித்தவர்களுக்கு
இது உடம்புக்கு ஒத்துக்கொள்ளுமா என்ற கேள்விகளுக்கு இடமில்லை. இது சட்டம். பின்பற்றியே ஆகவேண்டும்.
உறுதியுடன் இவ்வாறு
குளிப்பவர் ஆரோக்கியமாகவே உள்ளனர். முன்
சொன்ன ரத்னா ஃபேன் ஹவுஸ் உரிமையாளர்கள் குடும்பங்களில் இது விடாமல் கடைப்பிடிக்கப் படுகிறது என்றும் இவ்வாறு குளிப்பதால் எந்தத்
தீங்கும் ஏற்பட்டதில்லை என்றும் அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் என்னிடம்
கூறினார்.
2 இயற்கையோடு இயைந்த வாழ்வு.
மேனாட்டு மருத்துவம்
விரைந்து குணம் தருவது போலக் காட்டினாலும் பிற்காலத்தில் பெருங்கேட்டிற்கு
வழிவகுக்கும் பக்க விளைவுகள் தருவதையும் பெரும் செலவு வைக்கிறபடியால் ஏழைகளுக்கு
ஏற்றதல்ல என்பதையும் அதைப் பயிலும் மருத்துவர்களில் பலர் அறநெறிப் பண்புக் குறைவு
காரணமாகத் தன் சொந்த லாபமே குறிக்கோளாகக் கருதி நோயாளிகளின் செல்வத்தைச்
சுரண்டுவதையும் நாம் இன்று அறிந்திருக்கிறோம். சுவாமிகள் காலத்திலும் இத்தகைய நிலை இருந்ததை
அறிகிறோம். அவர் தன் சீடர்களிடம்
இயற்கை வைத்தியத்தைப் பின்பற்றச் செய்தார்.
இன்று இயற்கை
மருத்துவத்திலும் ஆடம்பரங்களும் திசை திருப்பங்களும் புகுந்து விட்டன. பஞ்சபூத சிகிச்சை, மண்பட்டி, நீர்ப்பட்டி, தொட்டிக் குளியல், சூரியக் குளியல், பல விதமான மூலிகைச் சாறுகள் என்று இயற்கை
மருத்துவமும் செலவுள்ளதாக, அறநெறிப்
பண்பு குறைந்தோர் பொருளீட்டும் வழியாக மாறிவிட்டது.
சுவாமிகளின் இயற்கை
வைத்திய முறையோ மிக எளிது. உடலாலும்
உள்ளத்தாலும் தூயவராக ஒழுகி வந்தால் நோயே வராது என்பது அவரது திண்ணம். ஆரோக்கிய நிலையில் சிறு தடுமாற்றம் இருப்பின்
அது விடியல் நீராடல், திருநீறு, வழிபாடு, வெள்ளி தோறும் உண்ணா
நோன்பு இவற்றின் மூலம் போய்விடும். இதையும்
மீறி முன்வினைப் பயனால் நோய் ஏற்பட்டால் எந்த வகையான மருந்தும் உண்ணவோ மேலுக்குத்
தடவிக் கொள்ளவோ கூடாது. மருத்துவரிடம்
போகக் கூடாது. குளித்தபின் திருநீறு
பூசிக் கொள்ள வேண்டும், அதில்
சிறிது வாயில் இட்டுக் கொள்ளலாம். அதுவே
மருந்தாகும். திருநீறு பூசாத
சமயத்தவராக இருந்தால் சுத்தமான மண்ணைப் பயன்படுத்தலாம் என்ற விலக்கு
தரப்பட்டிருந்தது. சுவாமிகளின்
சீடர்களில் இஸ்லாமியரும் உண்டு, கிருத்துவரும்
இருந்தனர். அவர்கள் குளித்தபின்
மேற்சொன்னவாறு மண்ணை நெற்றியில் தரித்துக் கொண்டனர்.
எல்லாச்
சூழ்நிலைகளிலும் குளிர்ந்த நீரில், விடியற்காலையில்
நீராட வேண்டும், மருந்து உண்ணக் கூடாது
என்னும் விரதத்தைக் கடைப்பிடித்தல் ஆரோக்கியம் பற்றி நாம் சாதாரணமாக நினைப்பதற்கு
மாறானதாக இருக்கிறது. இதைப்
பின்பற்றுபவர் சுவாமிகளிடம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவராக இருந்தால் அன்றி
இது நடைபெறாது. சுவாமிகள் ஒரு போதும்
என்னை நம்பு என்று உபதேசித்ததில்லை. மாறாக
இறைவனை நம்புங்கள், அவன்
நமக்கு நலம் மட்டுமே செய்வான், நாம்
தவறு செய்யின் தந்தை போல நமக்குச் சிறு தண்டனை தந்து வழிப்படுத்துவான் என்பதை உறுதியாக நம்புங்கள் என்று உபதேசித்தார். நோய் என்பது நாம் செய்த பாவங்களுக்காக, இறைவன் நமக்குத் தரும் ஒரு தண்டனை. அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலக் கூடாது. அதை அனுபவித்துத் தீர்க்க வேண்டும் என்பது
அவரது கருத்து. பல மருத்துவரிடமும்
சென்று பலனில்லா நோயாளிகள் பலர் இறுதியில் சுவாமிகளிடம் வந்து நோய் நீங்கப்
பெற்றனர். பலருடைய தீராத
நோய்களைச் சுவாமிகள் தீர்த்து வைத்தார். அவர்கள்
அவரது தீவிர பக்தர்கள் ஆனார்கள்.
மனக்கவலை
மாற்றிய மகான்
தனக்குவமை இல்லாதான் தாளைப்
பற்றுவது ஒன்று தான் மனத்துயர் நீக்கி மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதைச்
சுவாமிகள் வலியுறுத்திச் சொன்னார்கள்.
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே
துணிந்தொழிந்தேன் ஒன்றே என்
உள்ளத்தினுள் அடைத்துவைத்தேன் –ஒன்றே காண்
கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொன்னொளிசேர் அங்கையாற்கு ஆளாம் அது.
என்று காரைக்கால் அம்மையார்
கூறியபடி இறைவனுக்கு நம்மை ஆளாக்கிக் கொண்டுவிட்டால் நமக்குத் துன்பம் ஏது?
சுவாமிகள் இறைவனைக்
குறிப்பிடுவதற்கு உடையவன் என்ற சொல்லை மிகுதியும் பயன்படுத்தினார். ஸ்வாமி என்ற
வடசொல்லின் நேர் மொழிபெயர்ப்பாக இருப்பினும் தமிழில் கூறும்போது அதன்
முழுப்பொருளும் வெளிப்படுகிறது. இறைவன் உடையவன் என்றால் நாம் அவனது உடமை என்றாகி
விடுகிறது. உடமைப் பொருளைக் காத்தல் உடையவனுக்கு அல்லவா கடமை? அவன் கடன் அடியேனையும்
தாங்குதல், என் கடன் பணி செய்து கிடப்பதே நாவுக்கரசர் கூறியபடி சுவாமிகள்
இறைவனிடம் மாறாத பற்றுறுதி கொண்டிருந்தார். அதையே நமக்கும் உபதேசிக்கிறார்.
இறைவனை உடையவனாகக் கருதிவிட்டால்
பின் நமக்கென்று எந்தக் கவலையும் படத் தேவையில்லை. நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே என்று கவலையற்று இருக்கலாம். இறைவன் பேராது நின்ற பெருங்
கருணைப் பேராறு. அடியார்களுக்கு எவ்வெப்போது எதை எதை அளிக்க வேண்டும் என்று அவன்
அறிவான். அவன் நமக்குத் தருவது நல்லதாக இருந்தாலும் கெட்டதாகத் தென்பட்டாலும் நாம்
அதை ஏற்றுக் கொள்வது தான் உண்மையான பக்தியின் அடையாளம். இதை விளக்கும் வகையில்
சுவாமிகள், “வந்ததை ஒப்புக் கொள்வாய் மனமே” என்றும் “வந்ததுவே சிவன் தந்தது” என்றும்
பாடுகிறார். நமது உறவினரோ, நண்பரோ இறந்துவிட்டால் வருந்துதலும் அழுதலும் கூடாது
என்று அவர் விதித்ததும் இந்த அடிப்படையில் தான். நோய் வந்த காலத்தில் மணி மந்திர
ஔடதங்களை நாடுதல் உடையவனின் கணக்குக்கு மாறான குறுக்கு வழிகள் என்பது அவரது
உபதேசம்.
சமுதாயப் பிணி அகற்றிய சதுரர்
சுவாமிகள்
தோன்றிய காலத்தே இருந்த சமுதாயக் குறைகளை ஒழிக்க அவர் கூறிய உபதேசங்கள்
அக்காலத்தில் புரட்சிகரமாகவே தோற்றம் அளித்திருக்க வேண்டும். நாள் கோளை நம்பாதே,
மணி மந்திரங்களை நாடாதே, தெய்வத்துக்கு நேர்ச்சைகள் செய்து கொள்ளாதே என்று அவர்
உபதேசித்தது தற்கால நாத்திக வாதிகளின் கூற்று போலத் தோன்றினாலும் அவை இறைவனின்
தனிப் பெருங் கருணையில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையை அடிப்படையாகக்
கொண்டவை. “தெய்வமே. எனக்கு நீ செல்வம் தந்தால் நான் உனக்கு அபிஷேகம் செய்கிறேன். நோய் நீக்கினால்
காவடி எடுக்கிறேன். மொட்டை அடித்துக் கொள்கிறேன்” என்றெல்லாம் வணிகத் தனமாகப் பேரம் பேசுவது உடையவனின் பெருங் கருணைக்கு ஊனம்
கற்பிப்பது ஆகும் என்பது அவரது உபதேசம்.
வள்ளலாரைப் போல இவரும் சாதி சமயச்
சழக்குகளைக் கடந்து ஒன்றேயான பரம்பொருளைப் போற்றச் செய்கிறார். இவரது வழிபடு தெய்வம் கணபதி என்றாலும்
சிவனையும் முருகனையும் மீனாட்சியையும் பிற மத தெய்வங்களையும் போற்றிப்
பாடியுள்ளார். அல்லா என்பதும் ஏசு என்பதும் ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமில்லா ஈசற்கு
அமைந்த ஓராயிரம் திருநாமங்களில் சில என்பது அவரது கொள்கை.
ஏசு கிருஸ்து என்னும் நாமங்கள்
சூட்டியே எங்கும் பல அற்புதங்கள் காட்டிச் சீட ரங்கம்
பன்னிரண்டுகள் நாட்டி சக்கரம் வந்தது பொய்யா?
...............முகம்மது நபி சல்லல்லாகு அலைகியு சல்லமவர்கள்
வந்து நாட்டில் கொடி கட்டி நீதி
செய்த பாட்டினைக்
கேட்டதும் பொய்யா?
என்று கேட்கிறார்.
அவரது சீடர்களில் எல்லா மதத்தினரும்
இருந்தனர். இறைவனை வழிபடு என்று தான் அவர் உபதேசித்தாரே அன்றி இப்படித்தான்
வழிபடவேண்டுமென்று எந்த முறையையும் அவர் குறிப்பிடவில்லை. அவரவர் வழக்கப்படி
விருப்பப்படி வழிபடலாம் என்று சுதந்திரம் அளித்து ஒரு சமரச சன்மார்க்க சமுதாயத்தை
ஏற்படுத்திய அவரை வள்ளலாரின் தென் பதிப்பு என்று கூறலாம்.
வள்ளலாரைப் போல இவரும் காவி வேட்டி
முதலான புறத் தோற்றங்களுக்கு
முக்கியத்துவம் கொடுக்காமல் அகத் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்.
உள்ளத்தில் உண்மையான பக்தி இல்லாமல் வெறும் மந்திரங்களை வாயினால் உரைத்தல்
பயனற்றது என்பது அவரது கருத்து.
லாயில்லா காலில்லா என்று
கலிமா நவின்றாலாகுமோ
நன்று நேயமாக ரகிமான் கட்டளைப் படி
நிலைத்தாலல்லவோ மிக நன்று என்று பாடுகிறார்.
ஏழுபிறவிக் கடலை
ஏறவிடு நற்கருணை ஓடக்காரர்
சுவாமிகள் தம்
தவ வலிமையால் பல அற்புதங்கள் செய்தார். நூறு பேருக்குச் சமைத்த உணவைக் கொண்டு இரு
நூறு பேர் வயிறார உண்ணும்படி செய்தார். நோய்களையும் பேய்களையும் தம் கரத்தால்
தொட்டே ஓடச் செய்தார். இறந்து போனவரைப் பிழைக்க வைத்தார். தன் சீடர்களும் திருநீறு
கொடுத்து நோய் நீக்கும் வலிமை பெறச் செய்தார்.
இத்தகைய சித்து
விளையாட்டுகளே தம் தவத்தின் முடிந்த முடிவாகக் கொள்ளவில்லை அவர். தம் சீடர்களும்
அத்தகைய மயக்கம் கொள்ள இடம் தரவில்லை.
அம்புவி
போற்றிடப் பெரும் சித்துகளைக் காட்டி
அனேக தேவர்களுக்கு இடுக்கண்கள்
செய்தது
போதும் போதுமையே எடுத்த சென்மம்
போதும்
போதுமையே.
என்று அவர்
பாடுகிறார். சித்துகள் கைவரப் பெற்றபின் அத்துடன் நிறைவு பெற்றதாகக் கருதாமல்
தொடர்ந்து இறைவனைத் தியானித்து வந்தால் நிஷ்டை கை கூடும். பிறவிப் பிணி ஒழித்துப்
பேரின்ப நிலை எய்தலாம் என்கிறார் அவர். சித்துகளால் மட்டும் பெருமை பெற்றோர்
மறைந்தால் அவர் தம் புகழும் மறைந்து விடும். நிலை முத்திக்கான வழியைக் காட்டியதால்
தான் சுவாமிகளின் புகழும் நிலைத்துள்ளது.
சுவாமிகளின்
போதனைகள் சட்டம் என்ற பெயரால் வழங்கப்பட்டாலும் அவை கடுமையானவையாக இல்லை. அவர்
தம்மைப் பின்பற்றி எவரும் துறவு கொள்ள அனுமதிக்கவில்லை.
சுவாமிகள்
மரக்கறி உணவுக் கொள்கையை வலியுறுத்தினார். அது அளவு கடந்த அன்பின் அடிப்படையில் அமைந்தது.
உணவுக்காக உயிர்களைக் கொல்லுவதை மட்டும் அவர் தடுக்கவில்லை. நமக்குத் துன்பம்
தரும் விலங்குகளுக்கும் பூச்சிகளுக்கும் கூடத் தீங்கிழைக்கக் கூடாது என்று அவர்
போதித்தார். கொடிய தேளையும் விஷப்பாம்புகளையும் சுவாமிகளின் பெயரைச் சொல்லிக்
கையால் பிடித்துப் புறத்தே கொண்டுவிடுவோர் பலர் அவருடைய சீடர்களில் இருந்தனர்.
சுவாமிகளின் அருள் வெள்ளமும், அவரது உபதேசங்களில் அடங்கி இருந்த உண்மையின் வலிவும்
அடியவர்களுக்கு அவர் மேல் இருந்த நம்பிக்கையும் புலனாகின்றன.
சுவாமிகள்
வலியுறுத்தியது ஒன்று தான் – உடையவன் பால் பற்றுறுதி. மற்ற விஷயங்களில் அவர்
அடியார்களுக்கு எல்லையற்ற சுதந்திரம் அளித்தார். சட்டத்தை
முழுமையாகப் பின்பற்ற முடியவில்லையா, கவலை வேண்டாம், முடிந்த வரை
செய்யுங்கள். வேலைக்கு ஏற்ற கூலி உண்டு.
உடையவனிடம் முறையிடுங்கள். அவனே உங்களுக்கு வழிகாட்டி சட்டத்தைப் பின்பற்றத்
தேவையான மன வலிமையை அளிப்பான். உடையவனை எப்பெயரிட்டாவது அழையுங்கள், எந்த மதம்
சாதி வழிபாட்டு முறையைச் சேர்ந்தவரானாலும் அவரவர் முறைப்படி உடையவனைச்
சேவியுங்கள். நன்மையோ தீமையோ எதுவானாலும் அதை அவனது அருட்கொடையாக ஏற்று
மகிழுங்கள். அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு சோதிடம் மணி மந்திரம் ஔடதம்
அறமன்றம் முதலான குறுக்கு வழிகளை நாடாதீர்கள் என்று உபதேசித்தார்.
அறம் காக்க வந்த
அவதாரம்
எப்பொழுதெல்லாம்
அறத்திற்கு வீழ்ச்சியும் மறத்திற்கு எழுச்சியும் உண்டாகிறதோ அப்பொழுதெல்லாம் நான்
என்னைப் பிறப்பித்துக் கொள்கிறேன் என்று கீதையில் கண்ணன் கூறியபடி மக்கள்
கூட்டத்தில் அவ்வப்போது அறம் நாட்ட ராமனாகவும் கிருஷ்ணனாகவும் புத்தராகவும்
ஏசுவாகவும் முகமதுவாகவும் வள்ளலாராகவும் வந்த இறைவனே இரெட்டியப்பட்டி
சுவாமிகளாகவும் அவதரித்தான் என்று கொள்ளலாம். அவர்கள் பேசின மொழியும் கூறிய
வார்த்தைகளும் மாறுபட்டாலும் இவர்கள் அனைவரின் கருத்தும் ஒன்றே.
உயிர்களிடத்தில்
அன்பு வேணும் – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
என்பதே அது.
சுவாமிகளின்
நூறாண்டு பழமையான உபதேசங்கள் இன்றைக்குப் பயன்படுமா? நிச்சயமாக. சொல்லப் போனால்
இன்றைக்குத் தான் அந்த உபதேசங்களுக்கு அவசியம் அதிகமாகி உள்ளது. மதங்களிடையே
பூசலும், சாதிகளிடையே சண்டையும் செல்வம் அதிகாரம் புகழுக்காகப் பஞ்சமா
பாதகங்களுக்கு அஞ்சாத நிலைமையும் இயற்கைக்குப் புறம்பான வழிகளிலே நடந்து உடம்பைக்
கெடுத்துக் கொள்ளும் போக்கும் சென்ற நூற்றாண்டை விடத் தற்போது அதிகம்
காணப்படுகிறது.
விஞ்ஞான
யுகத்தின் பக்க விளைவு நம்பிக்கைக் குறைவு. அறிவினால் எல்லாம் சாதித்து விட முடியும்
என்ற ஆணவமும் நம் அறிவுக்கு எட்டாதது எதுவும் இல்லை என்ற அறியாமையும் தற்போது
நம்மை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கின்றன. விளைவு நிம்மதி இன்மை. மனோ வாக்
காயங்களுக்கு எட்டா இறைவனின் சீலத்தை யோகிகளே மெல்லத் தெளிந்தறிவர். நம் போன்று
மெய்ஞானக் குன்றின் அடிவாரத்தில் இருப்போர் நம்புவதே வழி.
நம்புவதே வழி
என்ற மறைதனை நாம் இன்று நம்பிவிட்டோம் என்றார் பாரதி. ஈமான் என்ற பெயரில் இஸ்லாம்
வலியுறுத்துவதும் விசுவாசம் கொள்ளுங்கள் என்று கிருத்துவம் திரும்பத் திரும்ப
முழங்குவதும் இதுவே. எல்லாச் சமயங்களுக்கும பொதுவான இறைவன் மீது எல்லாச்
சமயங்களும் வலியுறுத்தும் நம்பிக்கை
மார்க்கத்தில் செல்வது தான் நமது இன்னல்களுக்குத் தீர்வு என்ற சுவாமிகளின் கூற்று
இன்றைக்கும் பொருத்தமாகவே உள்ளது.
தற்காலத்தின்
மற்றொரு போக்கு இயற்கை நியதிகளை அலட்சியம் செய்து உணவு, உறக்கம், இல்லற வாழ்வு இவற்றில் கட்டுப்பாடு இன்றி மனம் போன போக்கில் வாழ்தலும், மேலை
நாட்டாரைப் பார்த்துக் கண்மூடித்தனமாகப் பெருநுகர்வு கொள்ளலும். தன் உண்மையான தேவை எது என்பதை உணராமல் கண்டதே
காட்சி, கொண்டதே கோலம் என்ற முறையில் மற்றவரைப் பார்த்துத் தானும் பல பொருட்களை
வாங்க வேண்டும் என்னும் எண்ணம் அதிகமாகி வருகிறது. தேவைக்கு மேல் உணவு உண்ணல்,
தேவைக்கு மேல் உடை வகைகளை வாங்கிக் குவித்தல், தேவையற்ற பயணங்கள், பயண சாதனங்கள்,
புலன் இன்பத்திற்கான பொருட்கள் என்று இப்படிக் குவித்துக் கொள்வதால் எவ்வளவு
பொருள் ஈட்டினாலும் போதவில்லை. எப்போதும் குறையுடனேயே வாழ்கிறோம்.
மற்றவரைப்
பார்த்துப் பொறாமை, சமூக வளங்களைச் சுரண்டித் தனதாக்கிக் கொள்ளப் போட்டி,
சமூகத்தைச் சாதி, மதம், மொழி இவற்றின் பெயரால் பிரித்துத் தான் ஆதாயம் அடையும்
போக்கு – அம்மம்மா, எத்துணை குணக்கேடுகள்! உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்
என்ற நம் சான்றோர் சிநதனையும் அதனால் விளைந்த மன நிறைவும் எங்கே போயிற்று?
யாதெனின்
யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின்
இலன் என்ற வள்ளுவர் வாசகம் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.
அறம் நாட்ட
வேண்டிய ஆட்சியாளரே கொஞ்சமும் கூச்சம் இன்றி
ஊழல் வழிகளில் பொருள் சேர்க்கின்றனர். வேலியே பயிரை மேயும்போது உய்வு தான் என்ன?
சுவாமிகள்
வருங்காலத்தை உணர்ந்து தேவைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு உபதேசித்தார்.
பொன்னினாலே
செய்த பூஷணமென்றுமே போட
விரும்பினால் கேடு என்றும்
தேடும்
பொருளெல்லாம் கூட வராது
செகத்தில் வாழ்வை நம்பொணாதது என்றும் பாடுகிறார்.
அவர் தானும்
எளிய வாழ்க்கை வாழ்ந்து காட்டினார். அவருக்காக அடியவர்கள் ஆடம்பரச் செலவு செய்தால்
அவர் கோபிக்கவும் தயங்கியதில்லை.
இப்படி
சுவாமிகள் உபதேசித்த இயற்கையோடு இயைந்த எளிய வாழ்வும் இறைவன் பால் பற்றுறுதியும்
எக்காலத்துக்கும் பொருத்தமான அற வழிகளாகும்.